இந்தியா

ஆந்திர பால் பண்ணையில் கசிந்த அம்மோனிய வாயு: 14 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி 

ஆந்திர பால் பண்ணையில் கசிந்த அம்மோனிய வாயு: 14 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி 

EllusamyKarthik

ஆந்திராவின் சித்தூர் பகுதியின் புட்டலபட்டு மண்டலத்தில் உள்ள பந்தபள்ளியில்  அமைந்துள்ள பால் பண்ணையிலிருந்து கசிந்த அம்மோனிய வாயுவை சுவாசித்ததில் 14 பேர் மருத்துவமனையில் அவசர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

‘நேற்று மாலை 5 மணியளவில் புட்டலப்பட்டுக்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான பால் பண்ணையின் பால் பதப்படுத்தப்படும் பிரிவில் இருந்து அம்மோனிய வாயு கசிந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. 

அதனையடுத்து அந்த ஷிப்டில் பண்ணையில்  வேலை  பார்த்த 14 தொழிலாளர்கள் சித்தூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதனால் அவர்கள் திருப்பதியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளனர்’ என சித்தூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் நாராயண் பாரத் குப்தா தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட 14 பேரும் பெண்கள். இந்த சம்பவம் நிர்வாகத்தின் அலட்சியத்தினால் ஏற்பட்டதா அல்லது பணியாளர்களின் கவன குறைவினால் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரிக்க உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சித்தூர் மாவட்ட புட்டலபட்டுவின் காவல் அதிகாரி ஒருவர் பால் பண்ணையில் அம்மோனியா வாயு இருப்பு வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த சிகிச்சை கொடுக்கவும், சம்பவம் குறித்து விசாரிப்பது தொடர்பாகவும் ஆந்திராவின் அமைச்சர் பெடிரெட்டி ராமச்சந்திர ரெட்டி சித்தூர் மாவட்ட ஆட்சியருடன் பேசியுள்ளார்.