நேற்று விசாகப்பட்டினத்திலிருந்து பலாசா நோக்கிச் சென்ற பயணிகள் ரயில், சிக்னல் கோளாறு காரணமாக அலமண்டா - கண்டகப்பள்ளி இடையே நின்று கொண்டிருந்தது. அப்போது, அதே பாதையில் வந்த விசாகப்பட்டினம் - ராய்காட் பயணிகள் ரயில், பலாசா ரயில் மீது மோதியது. இதில் 3 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், 14 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் படைவீரர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு மனித தவறே காரணம் என்றும், சிக்னலை ரயில் ஓட்டுநர் கவனிக்கவில்லை எனவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விபத்து காரணமாக 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 15 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. 7 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.