இந்தியா

மகாராஷ்டிரா: மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 136 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 136 பேர் உயிரிழப்பு

Sinekadhara

மகாாஷ்டிராவில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி நேற்று மாலை வரை 136 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை கொட்டிவருகிறது. குறிப்பாக மகாராஷ்டிராவில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராணுவம் மற்றும் கடற்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்களை களமிறக்கியுள்ளது. உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக இரு ஹெர்குலஸ் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர்களில் 170 மீட்புப் படையினருடன், 21 டன் நிவாரணப் பொருட்கள் புவனேஷ்வரில் இருந்து புனே, ரத்னகிரி மற்றும் கோவாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 136 பேர் உயிரிழந்திருப்பதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது. கோலாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டிருப்பதால் சரக்கு வாகனங்கள் ஆங்காங்கே நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், கர்நாடகாவிலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்திய கடற்படையின் அவசரகால மீட்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கத்ரா அணை அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். சிங்குடா மற்றும் பைரே கிராமங்களில் இருந்து இதுவரை 100 பேர் மீட்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.