இந்தியா

தொழில்நுட்ப உதவி.. 5 வருடங்களுக்கு முன்பு தொலைந்துபோன சிறுவனை கண்டுபிடித்த போலீசார்!.

தொழில்நுட்ப உதவி.. 5 வருடங்களுக்கு முன்பு தொலைந்துபோன சிறுவனை கண்டுபிடித்த போலீசார்!.

JustinDurai

முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 5 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர் தெலங்கானா போலீசார். 

உத்தரபிரதேசத்தின் ஹண்டியா என்கிற ஊரிலிருந்து ஜூலை 14, 2015 அன்று, சோம் சோனி என்ற சிறுவன் தனது 8 வயதில் காணாமல் போயிருந்தார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் தனது மகன் காணாமல்போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்

இந்நிலையில் சிறுவன் தொலைந்த சில நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூலை 23 அன்று, காணாமல் போன சிறுவனை அசாமில் கோல்பாரா போலீசார் கண்டுபிடித்து உள்ளூர் குழந்தைகள் நல மையத்தில் சேர்த்தனர். எனினும் சிறுவன் சோம் சோனி ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர் என்பதால் பெற்றோர் குறித்த விபரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில் தெலுங்கானா காவல்துறை, நாடு முழுவதும் காணாமல் போன குழந்தைகளின் புகைப்படங்களை சேகரித்து, நாடு முழுவதும் குழந்தைகள் நல மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தைகளின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு கண்டறியும் ‘தர்பன்’ எனப் பெயரிடப்பட்ட முக அங்கீகார தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காணாமல்போன பல்வேறு குழந்தைகளை மீட்டு அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் பெற்றோரை தொலைத்த சோம் சோனியின் தரவுகளை ஆய்வு செய்த தெலுங்கானா போலீசார், ஹண்டியாவில் காணாமல்போன சிறுவன்தான் என்பதை தங்களது தர்பன் கருவி மூலம் உறுதி செய்த போலீசார், சம்பந்தப்பட்ட உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் மாநில போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் சோம் சோனி தனது பெற்றோருடன் இணைந்துள்ளார். சிறுவனை அவரது தாயார் ஆரத்தழுவி வரவேற்ற நெகிழ்ச்சியான வீடியோவை தெலுங்கானா மாநில காவல்துறை அதிகாரி சுவாதி லக்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.