இந்தியா

உ.பி: 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; போலீஸ் விசாரணை

உ.பி: 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்; போலீஸ் விசாரணை

Sinekadhara

உத்தரபிரதேசத்தில் 13 வயது சிறுமியை நான்கு பேர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டே வருவதாக சர்வேக்கள் கூறுகின்றன. 

அந்த வரிசையில், உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூர் மாவட்டத்திலுள்ள கார் பகுதியில் கடந்த சனிக்கிழமை 13 வயது பட்டியலினச் சிறுமியை 4 பேர் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை சிறுமியின் தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதில், தஸ்லீம், அப்துல், ரஷித் மற்றும் ரேஹான் ஆகிய நான்குபேரும் தன்னுடைய 13 வயது மகளை கரும்புத் தோட்டத்திற்குள் தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறியிருக்கிறார். அவர்கள்மீது இந்திய சட்டப்பிரிவு 376டி-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை எதிர்க்கும் சட்டத்தின்கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவல் வெளியிட்டது.

இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை மதியம் கர்முக்தேஷ்வர் பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ கமல் மாலிக் சிறுமியின் குடும்பத்தை சந்தித்து விரைவில் நீதி கிடைக்க முயற்சி எடுப்பதாக உறுதியளித்தார். பட்டியலினச் சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.