ராஜஸ்தானில் திருமண ஊர்வலத்தில் லாரி புகுந்ததில் 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் உள்ள நிம்பஹரே-வில் இருந்து பன்ஸ்வராவுக்கு திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. இந்த ஊர்வலம் அங்குள்ள ராம்தேவ் கோவில் அருகே உள்ள நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த லாரி ஒன்று, ஊர்வலத்திற்குள் புகுந்தது.
இதில், 4 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக, சோட்டி சாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் தனக்கு மன வேதனையை அளித்திருப்பதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் ராஜஸ்தான் மாநில முதலமைச் சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.