இந்தியா

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட சம்பவத்தை ஒத்திகை பார்த்த 12 வயது சிறுவனுக்கு நிகழ்ந்த துயரம்!

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட சம்பவத்தை ஒத்திகை பார்த்த 12 வயது சிறுவனுக்கு நிகழ்ந்த துயரம்!

Abinaya

கர்நாடகா பள்ளியில் நடக்கும் நாடக நிகழ்ச்சிக்காகச் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் பற்றிய நாடகத்தை அரங்கேற்ற இருந்த பள்ளிச் சிறுவன், தனது வீட்டில் நாடகத்துக்கான ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் சித்ரதூர்கா பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் சஞ்சய் கவுடா என்ற 12 வயது சிறுவன், பள்ளியில் நடக்கும் நாடக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, சுதந்திரப் போராட்ட வீரர் வேடத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் தனது வீட்டில் பெற்றோர் வீட்டில் இல்லாத சமயத்தில், பகத் சிங் பேசிய வசனங்களைப் பேசிப்பார்த்துக் கொண்டிருந்த போது, பகத் சிங்கினை தூக்கிட்ட சம்பவத்தையும் ஒத்திகைப் பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகத் தூக்குக் கயிற்று இறுக்கிக்கொள்ளவே, அதில் சிறுவன் மாட்டிக்கொண்டு உயிரிழந்துள்ளார்.

பின்னர், பெற்றோர் வீடு திரும்பிய போது, சிறுவன் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆய்வு நடத்திய காவல்துறை, ‘பகத் சிங் நாடக ஒத்திகையின் போது எதிர்பாராத விதமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளது’ என முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுவது, ‘எதிர்பாராத சம்பவங்கள் நமது கையில் இல்லை என்றாலும் கூட பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்குச் சரியான பக்குவம் வரும் வரை கூடுதல் கவனத்துடன் கண்காணித்து வருவது அவசியம்’ என்றுள்ளனர்.