இந்தியா

125 மணி நேரத்தை தாண்டிய தேடுதல் வேட்டை: எங்கே சென்றது ஏஎன்-32 விமானம்?

webteam

‌அதி நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன் 32 ரக போர் விமானத்தை தேடும் பணிகள் தொடர்வதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

அசாம் மாநிலம் ஜோர்காட் நகரின் விமானப்படை தளத்தில் இருந்து, ஜூன்3ம் தேதி மதியம் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம் அருணாசல பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. விமானத்தில் 8 விமானிகளும், 5 பயணிகள் என 13 பேர் இருந்தனர்.

இந்த விமானம் சீன எல்லையில் உள்ள சியோமி மாவட்டத்தில் பகல் 1 மணியளவில் சென்றபோது திடீரென மாயமானது. பறக்கத் தொடங்கிய 33 நிமிடத்தில் ரேடார் கருவியில் இருந்து காணாமல் போனதால், விமானப் படை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக மாயமான விமானத்தை தேடும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் விமானம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. விமானம் மாயமாகி 125 மணி நேரங்களை கடந்துவிட்ட நிலையில் தேடும் பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் ‌அதி நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ என் 32 ரக போர் விமானத்தை தேடும் பணிகள் தொடர்வதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்துள்ள இந்திய விமானப்படை, ''செயற்கைக்கோள், ரேடார் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி காணாமல் போன விமானத்தை கண்டறியும் பணிகள் அருணாச்சல் அருகே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்திய ராணுவம், உள்ளூர் காவல்துறை, மாநில அரசு நிர்வாகம், துணை ராணுவப் படை மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தில் காணாமல் போன வீரர்கள் மற்றும் பயணிகளின் குடும்பங்களுடன் தொடர்பில் இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.