ஆந்திராவில் நடைபெறும் தடை செய்யப்பட்ட சேவல் சண்டையில் சுமார் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கைமாறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல ஆந்திராவில் சங்கராந்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆந்திராவின் விஜயவாடா சுற்றுவட்டார பகுதியில் சங்கராந்தி விழாவை ஒட்டி சேவல் சண்டை நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும் வருடாவருடம் சேவல் சண்டை மிகப்பிரமாண்டமாகவே நடந்து வருகிறது.
இந்தச் சேவல் சண்டையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். சேவல் சண்டை மட்டுமின்றி பல விதமான சூதாட்டங்களும் அங்கு நடைபெறுகின்றன. சிறப்பு அனுமதி சீட்டுகள் மூலம் சேவல் சண்டையில் கலந்துகொள்ள சேவல் உரிமையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டு சேவல் சண்டைகளுக்கு அருகே மது விற்பனை, பிரியாணி விற்பனையும் படு ஜோராக நடந்து வருகிறது.
இந்தப் போட்டிகள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு இருப்பதால் வெளிப்படையாக அரசியல்வாதிகள் யாரும் இப்போட்டிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை என்றும் ஆனால் மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூதாட்டங்களில் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பலரும் கலந்துகொள்கின்றனர். இந்தப் போட்டிகளுக்கான சேவல்கள் தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் காக்கிநாடாவுக்கு கொண்டு வரப்படுகின்றன. ரூ100 முதல் ரூ5 லட்சம் வரை ஒரு போட்டிக்கான பந்தயம் நடைபெறுகிறது. இந்தச் சூதாட்டங்களில் சுமார் 1200 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜயவாடாவில் நடைபெற்ற சேவல் சண்டையின் போது போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 225 சேவல்கள்,300 கத்திகள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 390க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது சூதாட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.