ஹோலி பண்டிகை முடிந்த பின்பு தலைமுடியை தண்ணீர் ஊற்றி கழுவிய பள்ளி மாணவிகளுக்கு பிரம்பால் அடி கொடுக்கப்பட்ட கூறப்படும் சம்பவம் தெலங்கானாவி்ல பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஹோலிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தெலங்கானாவின் ஜன்கோன் மாவட்டத்தில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 120 மாணவிகள் நேற்று ஹோலிப் பண்டிகை கொண்டாடியதாக தெரிகிறது. இந்த மாணவிகள் அனைவரும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை அந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று ஹோலிப் பண்டிகை கொண்டாட்டம் முடிந்த பின்பு, தங்களுடைய தலை முடியை பள்ளியில் இருக்கும் குழாய் மூலம் வரும் நீரை பயன்படுத்தி கழுவியுள்ளனர்.
தெலங்கானாவில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை காரணம் காட்டி ஆசிரியை ஒருவர் மாணவிகளை அடித்ததாக கூறப்படுகிறது. மாணவிகளை அடித்த இந்தச் சம்பவம் தொடர்பாக குழந்தைகள் உரிமை அமைப்பான பல்லால ஹக்கலுா சங்கத்திடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பள்ளி மாணவிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளின் கையில் பிரம்பால் அடிக்கப்பட்ட காயத்தின் தழும்பு இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து குழந்தைகள் உரிமை அமைப்பின் அச்சுதா ராவ் கூறியபோது "நாங்கள் மேற்கொண்ட விசாரணையில் பள்ளியின் சிறப்பு அதிகாரி சுமலதா என்பவர்தான் மாணவிகளை அடித்ததாக தெரிகிறது. பள்ளி மற்றும் ஹாஸ்டலுக்கும் சுமலதாவே பொறுப்பாளராக இருந்துள்ளார். அவர்தான் ஹோலி பண்டிகையின்போது மாணவிகளை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக ஜான்கோன் மாவட்ட ஆட்சியிரிடம் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக மாணவிகள் மீது தாக்குதல் நடத்திய சிறப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.
பள்ளியில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து மாணவிகளிடம் தான் ஏற்கெனவே தெரிவித்திருப்பதாக சுமலதா தன் பக்கத்து நியாயத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள மாணவி ஒருவர் " அந்த ஆசிரியை பள்ளியில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக எப்போதும் சொன்னதில்லை. நாங்கள் தலைமுடியை கழுவிக்கொண்டு இருக்கும்போதே எங்களை பிரம்பால் தாறுமாறாக தாக்கினார். பள்ளியில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் எங்களை துணி துவைப்பதற்கும், சாப்பிட்ட தட்டை கழுவவதற்கும் எதற்கு அனுமதிக்கிறார்கள்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.