இந்தியா

ரத்த வெள்ளத்தில் புதருக்குள் வீசப்பட்ட சிறுமி... சுற்றி நின்று வீடியோ எடுத்த குரூர கூட்டம்

ரத்த வெள்ளத்தில் புதருக்குள் வீசப்பட்ட சிறுமி... சுற்றி நின்று வீடியோ எடுத்த குரூர கூட்டம்

நிவேதா ஜெகராஜா

உத்தர பிரதேசத்தின் கன்னுயாஜ் என்ற பகுதியில் 12 வயது சிறுமியொருவர் புதருக்குள் ரத்தவெள்ளத்தில் கிடந்த போது, அவரை மீட்காமல் அங்கிருந்த சில ஆண்கள் கூட்டமாக அவரவர் மொபைல் ஃபோனில் சிறுமியை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த கொடூரம் நடந்துள்ளது. வேதனையளிக்கும் விதமாக அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார் என்ற தகவல் பரவிவருகிறது. இருப்பினும் உ.பி. காவல்துறை இதை மறுத்திருக்கிறது.

உ.பி.யில் 12 வயது சிறுமியொருவர் ரத்த வெள்ளத்தில் பங்களாவொன்றின் பின்னே புதருக்குள் வீசப்பட்டிருக்கிறார். அவரை சுற்றி நின்றபடி ஆண்கள் கூட்டம் சிறுமியை பல கோணங்களில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலான பின்னர்தான் இக்கொடுமை வெளிச்சத்துக்கே வந்துள்ளது. வீடியோவில் அக்குழந்தைக்கு உடலில் கடுமையான காயங்கள் இருப்பது நமக்கு தெரிகிறது. குறிப்பாக அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் இருந்திருக்கிறது. இதனால் சிறுமி தனது கைகளை மட்டும் உயர்த்தி உயர்த்தி அங்கிருந்தோரிடம் உதவி கேட்டிருக்கிறார். அவரால் நகரக்கூட முடியவில்லை. இதைக்காணும் அச்சிறுமியை சுற்றியிருந்த ஆண்கள் கூட்டம், ஒன்றன்பின் ஒன்றாக அவர்களின் மொபைல் ஃபோனில் பல்வேறு கோணங்களில் நடந்தபடி சிறுமியின் அவதியை வீடியோ எடுத்துள்ளனர். அதிலொருவர்தான் அந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்திருக்கிறார். இதையடுத்து அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு கண்டனங்கள் எழுந்துள்ளன.

உத்தர பிரதேசத்தில் கன்னோஜ் பகுதியில் உள்ள டாக் பங்களா விருந்தினர் மாளிகையின் பின்புறம் வீசப்பட்டிருந்த அச்சிறுமியை, ஒரு மூத்த போலீஸ் அதிகாரி வந்து தன் கைகளில் தூக்கிக் கொண்டு அள்ளிச்சென்றிருக்கிறார். மற்றொரு வீடியோவில், அந்த போலீஸ் அதிகாரி தனது கைகளில் சிறுமியுடன் போக்குவரத்து நெரிசலில் ஓடுகின்றார்.

அதன்பின் ஆட்டோ ஒன்றில் சிறுமியை ஏற்றிச்சென்றிருக்கிறார். சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருந்திரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தர்பபில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி காவல் கண்காணிப்பாளர் குன்வர் அனுபம் சிங் தெரிவிக்கையில், “அந்தக்குழந்தை ஆபத்தான நிலையில் கண்டறியப்பட்டு, அங்கிருந்த உள்ளூர் காவல்துறையால் மீட்கப்பட்டிருக்கிறார். அருகிலிருந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை” என்றுள்ளார்.

சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ள தகவல்களின்படி, சிறுமி உண்டியல் வாங்குவதற்கு மதிய நேரத்தில் வெளியே சென்றிருக்கிறார். மாலை வரை சிறுமி வீட்டுக்கு வராததால் பெற்றோர் அவரை தேடிச்சென்றிருக்கிறார். தற்போதுவரை சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாகவே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்பகுதி மக்கள் உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்திருக்கும் தகவல்களின்படி சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என தெரிகிறது. இருப்பினும் காவல்துறை அதை மறுத்துள்ளது. சிறுமி கண்விழித்து தனக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து தெரிவிக்காமல் எந்த முடிவுக்கும் வர இயலாது எனக்கூறியுள்ளனர் காவலர்கள்.

இதுபோன்ற நேரத்தில் சிறுமிக்கு நேர்ந்த துயரத்துக்கு காரணமான கொடூர எண்ணம் கொண்டோரை நினைத்து கோபம் கொள்வதா அல்லது அவரை மீட்பதைவிட செல்போனில் பதிவிடுவதே பெரியது என நினைக்கும் மனிதர்களின் குணத்துக்காக கோபம் கொள்வதா என்றே தெரியாத நிலை உருவாகியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.