கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் மேலும் 12 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றிய போதிலும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கவே, அக்கட்சியுடன் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் குமாரசாமி கர்நாடக முதலமைச்சராக தேர்வானார். இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் கூட்டணி ஆட்சிக்குள்ளும் விரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 எம்எல்ஏக்களும், மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 3 பேர் தலைமைச் செயலகம் சென்றுள்ளனர். அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆட்சி நீடிக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இதனிடையே அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் குமாரசாமி நாளை மறுநாள் இந்தியா திரும்புகிறார். அதற்குள் அரசியல் பரபரப்பு அதிகமாகவே காணப்படுகிறது.