இந்தியா

குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்து: பாஜக எம்.பி.யின் 12 உறவினர்களும் உயிரிழப்பு

குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்து: பாஜக எம்.பி.யின் 12 உறவினர்களும் உயிரிழப்பு

JustinDurai

குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த விபத்தில் ராஜ்கோட் தொகுதி பாஜக எம்.பி.யின் 12 உறவினர்களும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஐ கடந்துள்ளது. இறந்தவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள். இதுவரை 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்வார் என்று கூறப்படுகிறது.

குஜராத்தின் மோர்பி நகரில் பாயும் ஒரு ஆற்றின் குறுக்கே 233 மீட்டர் நீளத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த கேபிள் பாலம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது ஆகும். அண்மையில் இந்தப் பாலம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த அக்டோபர் 26ஆம் தேதி மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த பாலத்தில் செல்வதற்கு நுழைவு கட்டணமாக 17 ரூபாய் விதிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் அந்த பாலத்திற்கு 500க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். அப்போது மாலை 6.30 மணியளவில் பாலம் திடீரென அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது. பாலத்தில் இருந்த 350க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கினர். இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணி நிலவரப்படி 132 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குஜராத் தகவல் தொடர்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 177 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். தண்ணீருக்குள் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆவர். விடியவிடிய மீட்புப் பணிகள் நடந்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் இருந்து ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர். நேற்றிரவு குஜராத் முதல்வர் பூபேந்திரா பட்டேல் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.

இதனிடையே ராஜ்கோட் தொகுதியின் பாஜக எம்.பி.யான மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியாவின் 12 உறவினர்களும் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா டுடே டிவியிடம் பேசிய மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா, "இந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட எனது குடும்பத்தில் 12 பேரை இழந்துவிட்டேன். எனது சகோதரியின் குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களை இழந்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக இந்திய தண்டனை சட்டப் பிரிவு 304, 308 மற்றும் 114 ஆகிய பிரிவுகளின் கீழ் குஜராத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தப் பாலத்தை முறையான தகுதி சான்றிதழ் இல்லாமல் திறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: 130 பேரை காவு வாங்கிய குஜராத் மோர்பி பாலம் - விபத்து நடந்தது எப்படி? பகீர் தகவல்