இந்தியா

குஜராத்: தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு - 20 பேரின் நிலை என்ன?

குஜராத்: தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழப்பு - 20 பேரின் நிலை என்ன?

ஜா. ஜாக்சன் சிங்

குஜராத்தில் தொழிற்சாலை ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர்.

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள ஹல்வாத் பகுதியில் தனியார் உப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல அங்கு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மதியம் 2 மணியளவில் தொழிற்சாலையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கினர். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர், விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 12 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து தெரியவில்லை. ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதமர் இரங்கல்

இதனிடையே, இந்த விபத்து சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மோர்பியில் உப்பு தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்து இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணம் பெற இறைவனை வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டோருக்கு உதவ மாவட்ட நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.