இந்தியா

‘பப்ஜி’ உட்பட 118 மொபைல் செயலிகளுக்கு தடை : காரணம் என்ன ?

‘பப்ஜி’ உட்பட 118 மொபைல் செயலிகளுக்கு தடை : காரணம் என்ன ?

webteam

பிரபல மொபைல் கேம் ஆன ‘பப்ஜி’ உட்பட 118 மொபைல் செயலிகளுக்கு மத்திய தொழில்நுட்பத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது.

லடாக் எல்லையில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேர் உயிரிழந்தனர். சீன தரப்பில் 35 பேர் இறந்தனர். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து லடாக் எல்லையில் பதற்றம் அதிகரிக்க, பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எல்லையில் அமைதி திரும்பியது. இருப்பினும் சீனாவிற்கு எதிராக பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க நினைத்த மத்திய அரசு, முதற்கட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. டிக்டாக், யூசி பிரவுசர் உட்பட பல முன்னணி செயலிகள் இதில் அடிபட்டன. இந்தியர்களின் தகவல் பாதுகாப்பிற்காக சீன செயலிகளுக்கு தடைவிதிப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து இந்தியாவின் சில செயலிகளுக்கு சீனா தடை விதித்தது.

இந்த சூழலில் கடந்த 3 நாட்களாக மீண்டும் லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இருநாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இதுதொடர்பாக நேற்று டெல்லியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று சீனாவின் பப்ஜி கேம், கட் கட், பாய்டு, ஃபேஸ் யு, இன் நோட், வூவ் மீட்டிங், சூப்பர் கிளீன், வீசாட் ரீடிங், கவர்ன்மெண்ட் வீசாட், சைபர் ஹண்டர், ரைஸ் ஆஃப் கிங்டம்ஸ், டேங்க் டங்க்ஸ், கேம் ஆஃப் சுல்தான்ஸ், ஆப் லாக், மியூசிக் எம்பி3 ப்ளேயர், வெப் பிரவுசர், கேலரி ஹெச்டி, எம்.வி மாஸ்டர், கேரம் ஃப்ரண்ட்ஸ், லூடோ ஆல் ஸ்டார், பைக் ரேஸிங், யூ லைக், டண்டன், விபிஎன் ஃபார் டிக்டாக், ஐ பிக், பியூட்டி கேமரா ப்ளஸ், ஹாய் மெய்டு, சோவுல் ஹண்டர்ஸ், மாஃபியா சிட்டி யொட்டா கேம்ஸ், ரைசிங் எம்பையர் நெட்ஈஸ் கேம்ஸ், ரூல்ஸ் ஆஃப் சர்விவல் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய தொழில்நுட்பத்துறை தடை விதித்துள்ளது.

இதற்கு முன்பு 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது கூறியபடியே, இந்த முறையின் பாதுகாப்பு நலன் கருதி சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இந்திய மொபைல் பயன்பாட்டாளர்கள் மற்றும் ஆன்லைன் பயன்பாட்டாளர்களின் தகவல்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையான்மைக்கு எதிரான என்பதாலும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் பலர் கோரிக்கைகளை முன்வைத்து வந்ததாகவும், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டிய விவகாரம் என்பதால் இந்தியர்களின் தகவல்களுக்கு ஆபத்தான செயலிகளை தடை விதித்திருப்பதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் மூலம் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட முடியும் என்பதாலும், தகவல்களை பிறருக்கு பகிர முடியும் என்பதாலும் இந்த சீரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.