இந்தியா

மதிய உணவிற்கான பணத்தை கொடுக்க மறுத்த தந்தை மீது புகார் கொடுத்த மாணவி

Sinekadhara

ஒடிசாவில் மதிய உணவு பணத்தையும், அரிசியையும் எடுத்துக்கொண்ட தந்தைமீது 11 வயது சிறுமி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷ்ரீ சங்கீதா சேதி. 11 வயதான இவர் துலுக்கா வித்யபிதா பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவருகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு சுஷ்ரீயின் தாயார் இறந்தபிறகு, அவருடைய தந்தை ரமேஷ் சந்திரா சேதி மறுமணம் செய்துள்ளார். தந்தையும், சித்தியும் சுஷ்ரீயை கவனித்துக் கொள்ளாததால், தற்போது தனது உறவினர் வீட்டில் வசித்துவருகிறார்.

கொரோனா ஊரடங்கால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கான பணமாக ஒரு நாளைக்கு ரூ.8.10ம், அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. சுஷ்ரீக்கு வழங்கப்படும் இந்த சலுகைகளை அவருக்கு கொடுக்க, அவருடைய தந்தை மறுப்பதாகக் கூறி, கேந்திரபாரா மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில், தனக்கென தனி வங்கிக்கணக்கு இருந்தபோதிலும், மாணவர்களுக்கான மதிய உணவுத் தொகை தனது தந்தையின் வங்கிக் கணக்கில் போடப்படுவதாகவும், மேலும் பள்ளியில் கொடுக்கும் அரிசியை அவரே சென்று வாங்கி வைத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த பணத்தை தனக்குக் கொடுக்குமாறு கேட்டபோதிலும் ரமேஷ் மறுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது வழக்கையைக் கேட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி சஞ்சிப் சிங்கை தொடர்புகொண்டு இதுபற்றி பேசியுள்ளார். மாணவியின் வங்கிக் கணக்கிலேயே பணம் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாதவும், மேலும் ரமேஷ் எடுத்துக்கொண்ட பணத்தை சுஷ்ரீயிடம் திருப்பி செலுத்த ஏற்பாடுகள் செய்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சுஷ்ரீயின் பள்ளி தலைமை ஆசிரியரைத் தொடர்புகொண்டு, மாணவிக்கு சேரவேண்டிய அரிசியையும் அவரிடமே தருவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.