இந்தியா

“கனிகா கபூருடன் இருந்த 11 பேருக்கு கொரோனா இல்லை” - மருத்துவர் தகவல்

“கனிகா கபூருடன் இருந்த 11 பேருக்கு கொரோனா இல்லை” - மருத்துவர் தகவல்

webteam

கனிகா கபூருடன் விருந்தில் கலந்து கொண்ட மொத்தம் 56 பேரில் 11 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது சோதனையில் உறுதியாகியுள்ளது.


கான்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் பிரம்மா தியோ ராம் திவாரி, கடந்த மார்ச் 13 அன்று அவரது தாய்மாமன் விபுல் டான்டன் நடத்திய ‘ஹவுஸ் வார்மிங் விருந்தில்’ கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 56 பேர் கலந்துக் கொண்டனர். இதில் பாலிவுட் பாடகி கனிகா கபூரும் கலந்துக் கொண்டார்.

இதனிடையே கனிகாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டது. ஆனால் அவர் இதனை வெளிப்படுத்தவில்லை. ஆகவே அவர் மீது அலட்சியமாக செயல்பட்டதாக லக்னோ காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இவருடன் விருந்தில் கலந்து கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆகவே அவர்களை அடையாளம் காணும் பணி தொடங்கியது.

இந்நிலையில் கான்பூரில் நடைபெற்ற விருந்து ஒன்றில் பாலிவுட் பாடகி கனிகா கபூருடன் கலந்துக் கொண்ட மொத்தம் 56 பேரில் 11 பேர் கொரோனா தொற்று இல்லை என்பது மருத்துவ சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தலைமை மருத்துவ அதிகாரி அசோக் சுக்லா கூறுகையில், “வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அதன்பின் சோதனைக்கு அனுப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளிவந்தன. டான்டன் உட்பட 11 பேருக்கு நடந்த சோதனையில் நெகடிவ் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை. மீதமுள்ளவர்களின் மருத்துவ முடிவுகளுக்காக காத்துக் கொண்டுள்ளோம்” என்றார்.

கனிகா கபூர் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் டான்டனின் வீட்டில் தங்கியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.