manipur PTI and x page
இந்தியா

மணிப்பூரில் பதற்றம்.. பாதுகாப்புப் படையினரால் குக்கி போராளி ஆயுதக்குழுவினர் 11 பேர் சுட்டுக் கொலை!

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று (நவ.11) பாதுகாப்புப் படையினருடன் நடத்திய என்கவுன்டரில் 11 குக்கி இனக் போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Prakash J

11 குக்கி போராளிகள் சுட்டுக் கொலை

மணிப்பூர் என்றதுமே, இப்போது எல்லோர் நினைவுகளிலும் வருவது கடந்த ஆண்டு நடைபெற்ற வன்முறை மட்டுமே. ஆனால், அதற்கு இன்றுவரை முடிவில்லாமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. ஆம், இன்றுகூட குக்கி போராளிகள் என்று சொல்லக்கூடிய சந்தேகத்திற்குரிய நபர்கள் சிலர், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள போரோபெக்ரா காவல் நிலையத்தில் இருந்து, தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இதற்குப் பதிலடி கொடுக்கும்வகையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் என்கவுன்டரும் அரங்கேறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், காவல் நிலையத்தை ஒட்டி இடம்பெயர்ந்த நபர்களுக்கான நிவாரண முகாமும் உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் முகாமையும் குறிவைத்து தாக்கியிருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குக்கி போராளிகளால் இந்த காவல் நிலையம் பலமுறை தாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. போலீஸ் நிலையத்தைத் தாக்கிய குக்கி போராளிகள், அங்கிருந்து ஜகுரடோர் கரோங்கில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று, வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர். அவர்கள் ஒரே நேரத்தில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தச் சண்டையின்போது 11 குக்கி போராளிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

கடந்த வாரம் முதல் மீண்டும் தொடரும் வன்முறை

ஜிரிபாமில் கடந்த வாரம் முதல் மீண்டும் வன்முறை வெடித்ததால் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த நவம்பர் 7ஆம் தேதி, ஹமர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மெய்தி இன போராளிகளால் கொல்லப்பட்டார். மேலும், அவர்கள் ஜிரிபாமில் உள்ள வீடுகளுக்கும் தீ வைத்தனர். இதைத் தொடர்ந்து மறுநாள், மெய்தி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, ​​சந்தேகப்படும்படியான குக்கி போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையும் படிக்க: வங்கதேசம்| ட்ரம்ப் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது அடக்குமுறையை ஏவிய யூனுஸ் அரசாங்கம்! பின்னணி என்ன?

தொடரும் துப்பாக்கிச் சூட்டால் அஞ்சும் விவசாயிகள்

தொடர்ந்து இன்று காலை, குக்கி இன போராளிகள் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு விவசாயி காயமடைந்தார். இம்பால் பள்ளத்தாக்கில் வயல்களில் பணிபுரியும் விவசாயிகள் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக மலைப்பாங்கான பகுதியில் இருந்து போராளிகள் ஆயுதக் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் காரணமாக பள்ளத்தாக்கின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல விவசாயிகள் வயல்களுக்குச் செல்ல அஞ்சுவதால், நெல் பயிர்களின் அறுவடை பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் வன்முறைக்குக் காரணம் என்ன?

மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வன்முறைக் காடாக மாறியது மணிப்பூர். 2023 மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. இதில் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலரும் அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, இன்றளவும் முடிவுக்கு வரவில்லை. இக்கலவரத்துக்குப் பிறகு இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சாா்ந்த போராளிகளும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச்சேதம் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்கா | பீச்சில் நடக்க முடியாமல் தடுமாறிய ஜோ பைடன்.. உதவிய மனைவி.. #ViralVideo