இந்தியா

பாலக்காடு அருகே மண் சரிந்து 11 பேர் உயிரிழப்பு!

webteam

கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் மண் சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. நெம்மரா பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.

கேரளாவில் கனமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 50 வருடத்தில் இல்லாத அளவு மழை பெய்துள்ளதால் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மாநிலத்தில் உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும் திறக்கப்பட்டு உள்ளதால் கேரள மாநிலம் வெள்ளக்காடாக
 மாறியுள்ளது. சாலை போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

தண்டவாளங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. கொச்சி விமான நிலையம் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரைகளிலும் தஞ்சம டைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்புகள் குறித்து பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி, நாளை கேரளா செல்கிறார்.

இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெம்மாராவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரி ழந்துள்ளனர். மலைப்பகுதியான இங்கு மூன்று வீடுகள் அருகருகே இருந்தன. மண் சரிவில் இவ்வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் வீட்டுக்குள் இருந்த 2 குழந்தைகள் உட்பட 11 பேர் புதைந்து பலியாயினர். தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அவர்களில் 9 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரின் உடல்களைத் தேடி வருகின்றனர்.