model image x page
இந்தியா

ஜார்க்கண்ட்: போலீஸ் உடற்தகுதித் தேர்வு.. மயங்கி விழுந்த 11 பேர் உயிரிழப்பு.. என்ன காரணம்?

Prakash J

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், போலீஸ் வேலைக்கு சுமார் 1,27,772 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 21,582 பெண்கள் உட்ட 78,023 பேர் தகுதி பெற்றனர்.

ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கிய ஆட்சேர்ப்பு நடைமுறை பணிகள், 7 மையங்களில் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உடற்தகுதித் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 10 கி.மீ ஓட்டம் வைக்கப்பட்டது.

இதையடுத்து, உச்சி வெயிலில் ஓடிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் வரையில் எதிர்பாரதவிதமாக உயிரிழந்தனர். இவர்களின் மரணம் இயற்கைக்கு மாறான மரணம் என பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இறப்புக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் உடற்தகுதித் தேர்வில் இறந்தவர்கள், ஊக்கமருந்து பயன்படுத்தியிருக்கலாம் அல்லது சுட்டெரிக்கும் வெயிலும்கூட மரணத்துக்கு வழிவகைச் செய்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க: பீகார்: நிதிஷ்குமார் கட்சியிலிருந்து மூத்த தலைவர் பதவி விலகல்.. பாஜகவின் அழுத்தம் காரணமா?

இதற்கிடையில் அம்மாநில அரசு பிற்பகலில் நடைபெறும் ஓட்டம் முதலான உடற்தகுதித் தேர்வுகளை மாலை 4:30 மணிக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்திருப்பதுடன், அனைத்து மையங்களிலும் மருத்துவக் குழுக்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ், நடமாடும் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட போதுமான ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஹேமந்த் சோரன் அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறதா அல்லது மரணத்தை வழங்குகிறதா என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. "ஹேமந்த் சோரன் அரசின் நிர்வாகம் மற்றும் பிடிவாதத்தால் உடற்தகுதித் தேர்வு ஓட்டம் மரணத்துக்கான பந்தயமாக மாறியுள்ளது" என்று பாஜக மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ள அவர், “இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: அமைதிக்கு திரும்பிய மணிப்பூரில், மீண்டும் வெடித்த வன்முறை.. 2 பேர் பலி!