ஜம்மு- காஷ்மீரில் கடந்த ஐந்து மாதங்களில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட 101 பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் உள்ளூர்வாசிகள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலையே நிலவி வந்தது. தினம் தினம் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் பல பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது.
அதன்படி கடந்த ஐந்து மாதங்களில் பாதுகாப்பு படையினரால் 101 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. மேலும் ''இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து மே 31ஆம் தேதி வரை 78 உள்ளூர் பயங்கரவாதிகளும் 23 வெளிநாட்டு பயங்கரவாதிகளும் என 101 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக தெற்கு காஷ்மீர் பகுதியில் சோஃபியான் மாவட்டத்தில் 25 பேரும், புல்வாமாவில் 15 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது
இது ஒருபக்கம் இருந்தாலும் மறுமுனையில் பயங்கரவாதத்தில் இணையும் காஷ்மீர் இளைஞர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை 50 பேர் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளில் இணைந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு 53 பேரும், 2016ஆம் ஆண்டில் 66 பேரும் என தற்போதுவரை ஒவ்வொரு ஆண்டும் கணிசமான எண்ணிக்கையில் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.