சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மாட்டுச் சாணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்
வடக்கு சத்தீஷ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தின் ரோஜ்கி கிராமத்தில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. கால்நடை உரிமையாளர்களிடம் இருந்து மாட்டுச்சாணத்தை கிலோ ரூ.2க்கு வாங்கும் புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக லல்லா ராம், செம் லால் என்ற இரு விவசாயிகள் கால்நடைகள் தொடர்பான அமைப்பு ஒன்றில் புகார் அளித்துள்ளனர். மொத்தமாக 100கிலோவுக்கும் அதிகமான சாணம் திருட்டு போயிருக்கலாம் என தெரிகிறது. இந்த புதுவகை திருட்டால் மாடு வளர்ப்பவர்களும், கால்நடைகள் தொடர்பான அமைப்பினரும் கலக்கம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
மாட்டுச்சாணம் மூலம் ராக்கிகள், மண் விளக்குகள், சிலைகள், பெயர்ப்பலகைகள் போன்ற சில பொருட்களை உருவாக்கும் திட்டத்தை மாநில அரசு அறிமுகம் செய்து அதற்காக விவசாயிகளிடம் இருந்து மாட்டுச்சாணத்தை பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சுமாராக 46ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1.65 கோடிக்கு மேல் அரசு நிதி வழங்கியுள்ளது.