இந்தியா

அடுத்தடுத்து உயிரிழந்த 100 மாடுகள்: தீவிர விசாரணையில் போலீசார்!

அடுத்தடுத்து உயிரிழந்த 100 மாடுகள்: தீவிர விசாரணையில் போலீசார்!

webteam

ஆந்திராவின் கோத்தூர் ததேபள்ளி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பசு மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. மாடுகள் சாப்பிட்ட உணவில் ஏதேனும் விஷம் கலந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடாவின் கோத்தூர் ததேபள்ளி கிராமத்தில் கோசாலை ஒன்று செயல்பட்டு வந்தது. இங்கு 150 பசு மாடுகள் வளர்க்கப்பட்டு வந்தன. இங்குள்ள பசு மாடுகள் கனகா துர்கா கோவிலுக்கு நேர்த்தியாக கொடுக்கப்பட்டவை. கோசாலையில் உள்ள மாடுகளுக்கு தினமும் இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை உணவு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் இரவு உணவு உட்கொண்ட மாடுகள் வரிசையாக கீழே சரிந்து உயிரிழந்தன. 

இதனைக் கண்ட கோசாலையில் காவலாளி கோசாலையின் உறுப்பினருக்கு தகவல் கொடுத்துள்ளார். உறுப்பினர் வந்து பார்ப்பதற்குள் 100 மாடுகள்  உயிரிழந்தன. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விஜயவாடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். மாடுகளுக்கு கொடுக்கப்பட்ட உணவில் ஏதேனும் விஷம் கலந்திருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோசாலையை கவனித்து வந்த காவலாளியிடமும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் மேலும் 25 மாடுகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கால்நடை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன. மாடுகளின் உடற்கூறாய்வு வந்த பிறகே விசாரணையில் ஒரு தெளிவு ஏற்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்