கேக் சாப்பிட்டு இறந்த குழந்தை PT
இந்தியா

பஞ்சாப்: ’கேக்’ சாப்பிட்ட 10வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு.. சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்

பஞ்சாப்பில் பத்துவயது சிறுமி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் சாப்பிட்டு இறந்ததால் சோகம். கேக் சாப்பிட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதி.

Jayashree A

பஞ்சாப் மாநிலத்தில் பத்துவயது சிறுமி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கேக் சாப்பிட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பன்லால். இவரின் பத்து வயது பேத்தி மான்விக்கு கடந்தவாரம் பிறந்தநாள் வந்துள்ளது. பேத்தியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு ‘கேக் கனா’ (cake kanha) என்ற கடையிலிருந்து சாக்லேட் கேக் ஒன்றை ஆன்லைனில் ஆடர் செய்து வாங்கியிருக்கிறார்.

பிறந்தநாள் அன்று இரவு ஏழு மணிக்கு ஆடர் செய்து வந்த கேக்கை வெட்டி மான்வியின் பிறந்தநாளைக் குடும்பத்தார் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். இதில், மான்வி, மான்வியின் தங்கை, மான்வியின் தாயார் ஆகியோர் கேக் சாப்பிட்டு இருக்கின்றனர்.

இந்நிலையில், அன்றிரவு மான்வியின் தங்கை கேக் சரியில்லை என்று வாந்தி எடுத்துள்ளார். மான்வி தாயாரிடம் தாகமாக இருக்கிறது என்று தண்ணீர் வாங்கி அருந்தியுள்ளார். பின்னர், மான்வியின் உடல்நிலை மோசமடைய ஆரம்பித்துள்ளது.

மறுநாள் காலையில் கேக் சாப்பிட்ட அனைவருக்கும், உடல் உபாதை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சைக்காக பேத்தி இருவர் மற்றும் தனது மகளையும் அழைத்துச்சென்றார் ஹர்பன்லா. ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி மான்வி இறந்துள்ளார். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

போலிசாரின் முதல் கட்ட விசாரணையில், கேக் சாப்பிட்டதால் மான்வி இறந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ’கேக் கனா’ கடையின் உரிமையாளரை போலிசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் மான்வியின் உடற்கூராய்வின் முடிவை அடுத்து இந்த வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் வெளியே தெரியவந்த பிறகு, அந்த சிறுமி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில், அந்த சிறுமி கேக் வெட்டிய பிறகு அவரது குடும்பத்தினர் பலரும் அவருக்கு கேக் செல்லமாக ஊட்டி விடுகின்றனர். அந்த வீடியோவை பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கின்றது. இந்த குழந்தை இறந்தவிட்டதா என பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

கேக் கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் உணவு பாதுகாப்பு கேளிக்கையாக மாறிவிட்டதாக பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.