இந்தியா

`ப்ளாஸ்டிக்கிற்கு எதிரான போர் மட்டும் முடியவில்லை’-10 வயது மணிப்பூர் செயற்பாட்டாளர் ட்வீட்

`ப்ளாஸ்டிக்கிற்கு எதிரான போர் மட்டும் முடியவில்லை’-10 வயது மணிப்பூர் செயற்பாட்டாளர் ட்வீட்

நிவேதா ஜெகராஜா

மணிப்பூரில் 10 வயதாகும் காலநிலை மாற்ற செயற்பாட்டாளர் லிசிபிரியா கன்குஜம், பொது வெளியொன்றில் கிடந்த குப்பைகளை சுத்தம் செய்யும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வசிக்கும் மணிப்பூர் மாநிலத்தில் `யாவ்ஷாங்’ என்ற திருவிழாவொன்று கொண்டாட்டப்படுவது வழக்கம். அந்த திருவிழா முடிந்த பிறகு குப்பைகள் அதிகமாக சேர்ந்திருப்பதாகவும் அதையே தான் சுத்தம் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில் “யாவ்ஷாங் முடிந்துவிட்டது. ஆனால் ப்ளாஸ்டிக்கிற்கு எதிரான போர் மட்டும் முடியவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த லிசிபிரியா கன்குஜம், கடந்த 2020-ல் சர்வதேச மகளிர் தினத்திற்காக பிரதமர் மோடி முன்னெடுத்த `எனது ட்விட்டர் கணக்குகளை உத்வேகம் அளிக்கும் பெண்களிடம் அளிக்கப்போகிறேன்’ என்ற திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண்ணாக இருந்தார். ஆனால் அவர் அப்போது தனக்கு தரப்பட்ட கௌரவத்தை நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு தனது 9 வயதில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திலும் லிசிபிரியா கலந்துகொண்டிருந்தார்.