இந்தியா

மூன்று மலேசிய பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் !

மூன்று மலேசிய பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் !

மலேசிய நாட்டைச் சேர்ந்த மூன்று தமிழ் பெண்கள் ஜனவரி 1 ஆம் தேதி சபரிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்ததாக கேரள போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பின்பு இதுவரை 10 பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததற்கு ஆதாரமிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

இந்நிலையில் பிந்து, கனகதுர்கா என்ற 2 பெண்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் கேரளாவில் நடைபெற்றது. இதில் வன்முறை தாண்டவமாடியது. கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்தனர். சாலையில் டயர்களை எரித்தனர். இதில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளா மாநிலம் போர்க்களமாக காட்சியளிக்கிறது.

இந்நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி மூன்று மலேசிய பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்யயதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஜனவரி 1 ஆம் தேதி காலை சாமி தரிசனம் செய்த அந்த மூன்று பெண்களும் சாமி தரிசனம் செய்துவிட்டு பம்பாவுக்கு காலை 10 மணியளவில் திரும்பிவிட்டதாகவும் கூறுகின்றனர். இவர்களுக்கு போலீஸார் யாரும் பாதுகாப்பு அளிக்கவில்லை. அவர்களே வந்து திரும்பினர். ஆனால் அவர்களின் வயது விவரங்களை தெரிவிக்க கேரள போலீஸார் தெரிவிக்கவில்லை. 

Source: TOI