இந்தியா

தொடரும் உயிர் பலிகள் - அமர்நாத் யாத்ரீகர்கள் 16பேர் பலி

webteam

அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 35 மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக யாத்ரீகர்கள் பயணம் செய்வது வழக்கம். பள்ளத்தாக்கான மலைப்பாதை வழியாக பாஹல்காம் பகுதியிலிருந்து அமர்நாத் ஆலயத்தை சென்றடைய வேண்டும். 62-வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த ஆண்டின் யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இந்த யாத்திரை 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ரக்‌ஷா பந்தன் தினத்தன்று நிறைவடையும். இந்நிலையில், யாத்ரீகர்களில் சிலர் ஒரு வாகனத்தில் இன்று ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். ரம்பான் மாவட்ட எல்லைக்குட்பட்ட சாலையில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் உள்ள பெரிய பள்ளத்துக்குள் உருண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 16 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 35 பேர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரை காலம் தொடங்கி 18 நாட்களுக்குள் சாலை விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் 35 பேரும் அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேரும் என 43 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.