மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தீப்பற்றி மற்ற பகுதிகளுக்கும் மளமளவென பரவியிருக்கிறது. தீ கொளுந்துவிட்டு எரிவதால் முதற்கட்டமாக மருத்துவமனையிலுள்ள நோயாளிகளை வெளியே கொண்டுவரும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் 10 நோயாளிகள் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு கொண்டுவரப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான், இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும், விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஏராளமானோர் இந்த தீவிபத்தில் சிக்கி படுகாயமடைந்ததில் அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 பேரில் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
மின்கசிவால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தீ வேகமாக பரவிவருவதால் அருகிலுள்ள கட்டடங்களுக்கும் பரவாமல் இருக்க உள்ளூர் மக்களும், தீயணைப்பு வீரர்களும் போராடி வருகின்றனர்.