இந்தியா

பிரதமர் மோடி அமைச்சரவை : உத்தரப்பிரதேசத்திலிருந்து 10 அமைச்சர்கள்

webteam

மத்தியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்களில் அதிகபட்சமாக 10 பேர் உத்தரப்பிரதேசத்திலிருந்து எம்பியாகத் தேர்வானவர்கள்.

பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மொத்தம் 58 பேர் கொண்ட அமைச்சரவை நேற்று பதவியேற்றுக்கொண்டது. இதில் உத்தரப்பிரதேசத்திலிருந்து தேர்வானவர்களே அதிகம். வாரணாசியில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, மகேந்திர நாத் பாண்டே, சஞ்சீவ் பல்யான், சாத்வி நிரஞ்சன் ஜோதி, வி.கே.சிங், சந்தோஷ் கேங்வார், ஹர்தீப்சிங் புரி, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகிய 10 பேர் உத்தரப்பிரதேசத்தின் எம்பிக்கள் ஆவர். 

உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா எம்பிக்களான நிதின் கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், பியுஷ் கோயல், அரவிந்த் சாவந்த், தான்வே பாட்டில், ராம்தாஸ் அத்வாலே, சாம்ராவ் தாத்ரே ஆகிய 7 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். ராம்விலாஸ் பஸ்வான், ரவிசங்கர் பிரசாத், கிரிராஜ் சிங், ஆர்.கே சிங், அஸ்வினி குமார் சவுபே மற்றும் நித்யானந்த் ராய் ஆகிய 6 பேர் பீகாரைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆவர். 

மேலும் குஜராத், ராஜஸ்தான், அரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 எம்பிக்கள் அமைச்சராகியுள்ளனர். மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலா 2 எம்பிக்களும் அமைச்சராகியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், கர்நாடகாவின் மாநிலங்களவை உறுப்பினராகி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். ஆந்திரப்பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களைத் தவிர, அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.