சென்னையிலிருந்து கேரளாவிற்கு காரில் கடத்தப்பட்ட 1 கோடியே 2 லட்சம் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையிலிருந்து கேரளாவிற்கு கார் ஒன்றில் மறைத்து வைத்து கள்ளநோட்டுகள் கடத்தி செல்லப்படுவதாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இடுக்கி மாவட்டம் புளியன்மலைப் பகுதியில் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ்வழியாக அதிவேகத்தில் கடந்து செல்ல முற்பட்ட கேரள பதிவு எண் கொண்ட காரை போலீசார் சாதுரியமாக மடக்கி தடுத்து நிறுத்திச் சோதனை செய்தனர்.
ஆனால், காரில் கள்ளநோட்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்ததால், தமக்கு கிடைத்த தகவல் தவறு என கருதி போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் சந்தேகம் தீராமல் ரகசிய தகவல் மீது நம்பிக்கை வைத்து, சந்தேகத்திற்கு இடமான காரை, அருகில் இருந்த கார் பழுது நீக்கும் ஒர்க்க்ஷாப்பிற்கு கொண்டு சென்று காரை முழுவதும் சோதனை செய்தனர்.
அப்போது காரின் இருக்கைகள் அமைந்துள்ள இடத்தில் யாருக்கும் சந்தேகம் வராதபடியாக ஒரு சிறிய அறை ஒன்றை ஏற்படுத்தி, அதனுள் 500 ௹பாய் கள்ளநோட்டுகள் கட்டுகட்டாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காரில் 500 ரூபாயாக இருந்த ஒரு கோடியே இரண்டு லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கள்ள நோட்டுகளை கடத்தி வந்த கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ப்ரீதிஷ், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த சபீர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளநோட்டுகளை சென்னையிலிருந்து கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இடுக்கி மாவட்டம் மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த நவுஷாத் என்பவரிடம் வழங்கவும் திட்டமிட்டிருந்தாகவும் கைதான இருவரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனிடையே கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த கள்ளநோட்டுகள் சென்னையில் எங்கு அச்சடிக்கப்பட்டது? ஏற்கனவே கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்ட புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா? இதன் பின்னணியில் யார்? என்பது குறித்து தீவிர விசராணை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து கள்ள நோட்டுகள் கடத்தி வரப்பட்டது குறித்து கேரள போலீசார் மூலம் சென்னை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.