இந்தியா

சபரிமலை போராட்டம் : 1,400 பேரை கைது செய்த காவல்துறை

சபரிமலை போராட்டம் : 1,400 பேரை கைது செய்த காவல்துறை

webteam

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்த்து போராட்டம் நடத்திய 1,400 பேரை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சபரிமலைக்கு வந்த பெண்களை எதிர்த்து போராட்டம் நடத்திய விவகாரம் தொடர்பாக கேரள காவல்துறை கைது செய்யும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக கடந்த புதன் கிழமை முதல் இதுவரை 1,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நிலக்கல், பம்பா மற்றும் சபரிமலையில் போராடியதாக கைது செய்யப்பட்ட 210 பேர் மீது 440 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 150 பேர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய மாநில காவல் தலைமை அதிகாரி லோக்நாத் பெஹெரா, கைது செய்யப்பட்ட தகவல் உறுதியானது தான் என தெரிவித்துள்ளார். மாவட்ட தலைமை காவல் அதிகாரிகள் மூலம் இந்த நடவடிக்க மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அவர்கள் மீது வன்முறையை தூண்டுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல், மக்களை தாக்குதல், மக்களுக்கு சேவை செய்பவர்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுவர்களை கைது செய்வதற்காக திருவனந்தபுரம் தலைமை காவல் அலுவகலத்தின்கீழ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காவல்துறையினரின் இந்த நடவடிக்கை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக கேரள பாஜக தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த மாதத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இளம் பெண்கள் செல்லலாம் என்ற உத்தரவை ஏற்று சில பெண்கள் அங்கு சென்றனர். அவர்களை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் தடியடி நடத்த, பக்தர்கள் கல்வீசி தாக்க பதட்டமான சூழல் ஏற்பட்டது. அந்த சம்பவம் தொடர்பாகவே தற்போது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.