கேரளாவின் காசர்கோடு ஸ்ரீ ஆனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலில் பிரசாதத்தை மட்டும் உண்டு உயிர்வாழ்ந்து வந்த புகழ்பெற்ற 'சைவ' முதலையான “பபியா” நேற்று தனது 75வது வயதில் காலமானது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் முக்கிய ஈர்ப்பாக பபியா முதலை திகழ்ந்து வந்தது.
“கோவிலில் வழங்கப்படும் பிரசாத்தை சாப்பிட்டு மட்டுமே பபியா உயிர்வாழ்ந்து வந்தது. ஒரு நாளைக்கு இரண்டு முறை கோவில் பிரசாதம் வழங்கப்படும். கோவில் வளாகத்திற்குள் பாபியாவின் புகைப்படங்கள் பரவலாகப் பரப்பப்பட்டன. பாபியா எப்படி கோவில் குளத்திற்கு வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.” என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“பல ஆண்டுகளாக, கோவிலின் பக்தர்கள் பாபியா இங்குள்ள இறைவன் பத்மநாபனின் தூதர் என்று நினைத்தார்கள். அந்த தெய்வீக முதலை பெரும்பாலான நேரத்தை குகைக்குள்தான் கழித்தது. மதியம் மட்டுமே வெளியே வரும். இறைவன் மறைந்த குகையை முதலை பாதுகாத்து வருவதாகவும் உள்ளூர்வாசிகள் சொல்லுவர்” என கோவில் பூசாரி தெரிவித்தார்.
பபியா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அந்த முதலை சனிக்கிழமை முதல் காணவில்லை என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 11:30 மணியளவில் ஏரியில் சடலம் மிதப்பதைக் கண்டுபிடித்து, காவல்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு தகவல் அளித்ததாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏரியில் இருந்து முதலையின் சடலம் மீட்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது. அரசியல்வாதிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பபியா முதலையின் இறுதி அஞ்சலியில் பங்கேற்றனர்.