பாலியல் புகாருக்கு ஆளாகி பதவியை ராஜினாமா செய்த முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர், பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி நீதிமன்றம் பிரியா ரமணிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே. அக்பர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என மீடூ ஹேஷ்டேக் மூலம் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து தன் மீது தவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தனிப்பட்ட முறையில் தான் நீதிமன்றத்தில் நியாயம் கோரவுள்ளதாகவும் கூறி எம்.ஜே. அக்பர் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து பிரியா ரமணிக்கு எதிராக எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் எம்.ஜே. அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கில் பிரியா ரமணியை விசாரணைக்காக ஆஜராகுமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
அதன்படி பிரியா ரமணி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது பிணைத் தொகையாக ரூ.10,000 செலுத்த உத்தரவிட்டு அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மேலும் அடுத்த விசாரணை ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய பிரியா ரமணி, ''ஏப்ரல் 10-ம் தேதி என் மீதான குற்றச்சாட்டுகளை அவர்கள் முன் வைப்பார்கள். பின்னர்தான், நடந்த சம்பவத்தை என்னால் கூற முடியும். இந்த வழக்கில் உண்மைதான் என்னுடைய பாதுகாப்புக் கவசமாக இருக்கும்'' எனத் தெரிவித்தார்.