இந்தியா

பஞ்சாபில் திடீர் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் - தீவிரவாதிகள் செயலா என விசாரணை

பஞ்சாபில் திடீர் ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் - தீவிரவாதிகள் செயலா என விசாரணை

ஜா. ஜாக்சன் சிங்

பஞ்சாப் உளவுத்துறை தலைமையகம் மீது ராக்கெட் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது போலீஸாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது தீவிரவாதிகளின் செயலா என போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாபில் சமீபகாலமாகவே காலிஸ்தான் தனி நாடு கோஷம் மீண்டும் எழுந்து வருகிறது. கடந்த வாரம் கூட அம்மாநிலத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக, உளவுத்துறையினரும், ராணுவத்தினரும் பஞ்சாப் போலீஸாருடன் இணைந்து அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தான் ஆயுத உதவிகளை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இயங்கி வரும் உளவுத்துறை தலைமையகத்தின் மீது இன்று காலை ராக்கெட் வெடிகுண்டு தாக்கியது. மூன்றாவது தளத்தில் இருந்த ஜன்னலை தகர்த்துவிட்டு இந்த ராக்கெட் குண்டு அலுவலகத்துக்குள் பாய்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த தளத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராக்கெட் லாஞ்சரை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைப்பற்றப்பட்ட ராக்கெட் எங்கு தயாரிக்கப்பட்டது; தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்களா என்பது குறித்து காவல்துறையினரும், உளவுத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.