வெளிநாடு சென்று சிகிச்சைப் பெறுவதை சுஷ்மா விரும்பவில்லை என அவரது கணவர் தெரிவித்துள்ளார்
பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர். வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டவர். ட்விட்டர் மூலம் 24 மணி நேரமும் வெளியுறவு அமைச்சகத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.
இந்தியர்களோ வெளிநாட்டவரோ யார் வேண்டுமானாலும் ட்விட்டர் மூலம் சுஷ்மாவிடம் உதவி கேட்கலாம். பகல் என்றாலும் இரவென்றாலும் சுஷ்மாவிடம் இருந்து ட்வீட் மட்டுமின்றி கூடவே உதவியும் வரும். கட்சி பேதமின்றி பலராலும் நேசிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர் சுஷ்மா.
சுஷ்மாவுக்கு 2016ம் ஆண்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது நடந்த நெகிழ்ச்சி சம்பவத்தை அவரது கணவர் சுவராஜ் கவுசால், ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். அதில் சுஷ்மாவுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையை இந்தியாவில் செய்ய மருத்துவர்கள் தயாராக இல்லை.
அறுவை சிகிச்சைக்காக வெளிநாடு செல்லலாம் என்று பரிந்துரைத்தனர். ஆனால் அதனை சுஷ்மா ஏற்கவில்லை. நானே வெளிநாடு சென்றால், நம் நாட்டு மருத்துவமனை மீதும், மருத்துவர்கள் மீதும் மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள் எனக்கூறி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார் என தெரிவித்துள்ளார். நெட்டிசன்கள் பலரும் சுவராஜின் ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு சுஷ்மா குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.