இந்தியா

"ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்"- 12 மாநிலங்களில் ஜன 15 முதல் அமல் ?

"ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்"- 12 மாநிலங்களில் ஜன 15 முதல் அமல் ?

jagadeesh

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு திட்டம், 12 மாநிலங்களில் ஜனவரி 15-ஆம் தேதி அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ என்ற மத்திய அரசின் திட்டத்தின்கீழ் நாடு முழுமைக்கும் பொருந்தும் வகையிலான பொதுவான வடிவமைப்பில் ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அத்துடன் மாநில அரசுகள் அதே வடிவமைப்பு முறையைப் பின்பற்றி புதிய ரேசன் கார்டுகளை மக்களுக்கு வழங்க வலியுறுத்தியுள்ளது.

முதல் கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் 12 மாநிலங்களில் வரும் 2020-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதியிலிருந்து நாடு முழுமைக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் பயனாளிகள் அனைவரும் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஃப்எஸ்ஏ) கீழ் இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடைகளிலிருந்தும் தங்களது ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருள்களை பெறமுடியும். மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய ரேஷன் கார்டுக்கான வடிவமைப்பில் பயனாளர்களின் குறைந்தபட்ச தகவல்கள் இடம்பெற்றிருக்கும். ரேஷன் கார்டு எண் 10 இலக்கங்களை கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள பி.ஓ.எஸ் கருவிகளுடன் இணைத்த பின்னர் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபடும் என கூறப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானா, குஜராத் , மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்திய பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வரும் ஜனவரி 15-ஆம் தேதி இந்த திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.