இந்தியா

’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

’இவங்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்க’ : குழந்தைகளை மீட்ட காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

webteam

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தில் தத்தளித்த இரு பெண் குழந்தைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கி லேயே இடுப்பளவு தண்ணீரில், தோளில் சுமந்தபடி வந்ததாக காவலர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் கல்யாண்பூர் கிராமத்தில் வெள்ளத்தில் தத்தளித்த இரு பெண் குழந்தைகளை பிருத்விராஜ் ஜடேஜா என்ற காவலர் தோளில் சுமந்தபடி காப்பாற்றி கரை சேர்த்தார். இடுப்பளவு தண்ணீரில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஒன்றை கிலோ மீட்டர் தூரம் வரை அவர் நடந்து வந்தது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில், இரு குழந்தைகளையும் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே வெள்ளத்தை கடந்து வந்ததாக பிருத்விராஜ் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

’’கல்யாண் சாலையில் 40 பேர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக தகவல் வந்தது. எங்கள் டீம் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டது. அங்கு வேறு யோசனைக்கு இடம் இல்லை. அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. அதனால் என் தோளில் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு சென்றேன்’’ என்றார் ஜடேஜா.

ஜடேஜாவின் செயலுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான பாராட்டுகள் குவிந்துள்ளன. குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி, அம்மாநில கூடுதல் டிஜிபி ஷம்சர் சிங் மற்றும் ஏராளமான திரைபிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இதுபோன்ற காவலர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். 

‘இந்த வீடியோவை பார்த்து நெகிழ்ந்துவிட்டேன். இவர்களை போன்ற காவலர்களுக்கு நல்ல சம்பளம் மற்றும் சிறந்த வசதி களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்’ என்று ஒருவர் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.