பாலியல் வன்கொடுமைக்கு சற்றும் குறைந்தது அல்ல வீடு வாங்குவோரை ஏமாற்றும் குற்றம் என பாஜக எம்பி விஜய் கோயல் ஆவேசமாக பேசினார்.
நேற்றைய மாநிலங்களவையின் நேரமில்லா நேரத்தின் போது பேசிய பாஜக எம்பி விஜய் கோயல், “மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை ஏமாற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் வீடு விற்பவர்களுக்கு பாலியல் வன்கொடுமையில் வழங்கும் தண்டனையை விட உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். அவர்கள் பொருளாராத ரீதியான நடுத்தர மக்களை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர். எனவே வீடு வாங்கும் அப்பாவி மக்களை ஏமாற்றுவது பாலியல் வன்கொடுமையை விட குறைவான குற்றம் இல்லை” என்று ஆவேசமாக தெரிவித்தார். எனவே அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை கொடுத்தாலும் தவறில்லை என்றார்.
அதுமட்டுமின்றி டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கணக்கானோர் வீடு விற்கும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளதாக கூறினார். அமரப்பள்ளி போன்ற ஏமாற்று நிறுவனங்கள் தான் இதுபோன்ற மோசடிகளை செய்வதாகவும், அந்நிறுவனத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான ரியல் எஸ்டேட் நபர்கள் மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அதுமட்டுமின்றி தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனத்திற்கு எங்கிருந்து தான் பணம் வருகிறது எனத் தெரியவில்லை என்றும், அவர்களிடம் உள்ள கட்டுமானப் பணிகளை இனி அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதுமட்டுமின்றி போலியான விளம்பரங்களை காட்டி, அப்பாவி மக்களை ஏமாற்றும் நபர்கள் தொழிலதிபர்களாக இருந்தாலும், பிரபலங்களாக இருந்தாலும், விளம்பர தூதர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாய வேண்டும் என தெரிவித்தார்.