இந்தியா

‘நித்யானந்தா ஆன்மிக சுற்றுலாவில் இருக்கிறார்’ - நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

‘நித்யானந்தா ஆன்மிக சுற்றுலாவில் இருக்கிறார்’ - நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

webteam

இந்தியாவில் இருந்து தப்பியோடிய நித்யானந்தா ஆன்மிக சுற்றுலாவில் இருப்பதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நித்யானந்தா மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், அவர் எங்கேயோ இருந்து கொண்டு தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவுகளை இணையத்தில் நிகழ்த்தி வருகிறார். அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சிரமம் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமே கூறி இருந்தது.

குஜராத் போலீசாரின் கோரிக்கையை ஏற்று சர்வதேச விசாரணை அமைப்பான இண்டர்போல், நித்யானந்தாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இதனிடையே பாலியல் வன்கொடுமை புகாரில் நித்யானந்தாவின் ஜாமின் மனுவை ரத்து செய்யக் கோரும் வழக்கில் பெங்களூர் உயர்நீதிமன்றம், நித்யானந்தாவை ஆஜராகக்கோரும் சம்மனை அவரை நேரில் சந்தித்து அளிக்க வேண்டும் எனவும் இதுகுறித்த அறிக்கையை திங்கள் அன்று சமர்பிக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து தப்பியோடிய நித்யானந்தா ஆன்மிக சுற்றுலாவில் இருப்பதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்து வரும் டிஎஸ்பி பாலாஜி, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட சம்மனை நித்யானந்தா உதவியாளர் குமரி அர்ச்சனாநந்தாவிடம் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தா இல்லை எனவும் அவர் ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.