இந்தியா

"இங்கே இறந்தால் எனக்கு மகிழ்ச்சியே" - பிரதமர் மோடி உருக்கமாக பேசியதற்கு காரணம் என்ன?

நிவேதா ஜெகராஜா

நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் உள்ள சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழக மைதானத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த பாஜக கட்சியின் பூத் அளவிலான ஊழியர்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொண்டு, பேசினார். அப்போது பேசுகையில் அவர், “நான் இறக்கும் வரை காசியோ, காசியின் மக்களோ என்னை கைவிடமாட்டார்கள்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உ.பி.யில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசியில் நேற்று நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் மோடி, காசி மக்கள் அனைவரும் காசி விஷ்வநாத் கோயில் கட்டுமானத்துக்காக பெருமிதம் கொள்வதாகவும், தன்னை பற்றிய தனிப்பட்ட விஷயங்களில் சிலர் அரசியல் ரீதியாக தங்களை தாங்களே தாழ்த்திக்கொண்டுள்ளனர் என்றும் பேசியுள்ளார்.

நிகழ்ச்சியின்போது பேசிய பிரதமர், `மோடி இறக்கவேண்டும்’ என்று காசியில் பிரதமரின் இறப்புக்காக சிலர் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டார். அதுகுறித்து விரிவாக அவர் பேசுகையில், “நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை, செய்யவும் விரும்பவில்லை. ஆனால் காசியில் நான் இறப்பதற்கு பகிரங்கமாக சிலர் வாழ்த்தியபோது, உண்மையில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என் இதயம் மிகவும் நிம்மதியாக இருந்தது. என்னுடைய மிக மோசமான எதிரிகள்தான் இப்படி இங்கு வேண்டிக்கொண்டுள்ளனர். மோசமான எதிரிகள் என்றபோதிலும், அவர்களுக்கும் காசி என்மீது கொண்ட அன்பு தெரிந்திருக்கிறது. அதனால்தான் நான் இங்கு இறக்கவேண்டுமென பிராத்தித்துள்ளார்கள். இதன்மூலம் அந்த மோசமான எதிரிகள், என்னுடைய கனவுகளையெல்லாம் நிறைவேற்றி உள்ளார்கள். ஏனெனில் என் இறப்புவரை காசியோ, காசியின் மக்களோ என்னை கைவிட மாட்டார்கள்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசுகையில், “மக்கள் எனக்கு கொடுத்த நன்மைகளை போலவே, நான் சார்ந்துள்ள பாஜக கட்சியும் எனக்கு மிகப்பெரிய உதவியொன்றை செய்துள்ளது. அது, மகாதேவர் மற்றும் அன்னை கங்காவின் பாதங்களில் அமர்ந்து, காசிக்கு சேவை செய்வது! பாஜக-வின் உறுப்பினர்கள், இதேபோல நாடு முழுவதும் நன்மை செய்ய இருக்கிறார்கள். எங்கள் (பாஜக-வினர்) அனைவருக்குமே ஒரே நோக்கம்தான். அது, `தனிநபர்களைவிடவும் (கட்சியினரைவிடவும்), கட்சியே உயர்ந்தது. கட்சியைவிடவும் நாடே உயர்ந்தது’ என்பது. அதனால்தான் நாங்கள் தேர்தலை மட்டுமன்றி, மக்களின் மனங்களையும் வெல்கிறோம். வாரணாசியின் இன்றைய வளர்ச்சி, வருங்காலங்களில் இந்த நாடு அடையப்போகும் வறுமையில்லா - குற்றங்களில்லா நிலைக்கான வழியாகவும் துவக்கமாகவும் இருக்கிறது!” எனக்கூறியுள்ளார்.

முன்னதாக உ.பி.யின் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், `பிரதமர் மோடி உ.பி. தேர்தலுக்காக மாதக்கணக்கில் அங்கேயே தங்கி பிரசாரத்தில் ஈடுபவதை எப்படி பார்க்கின்றீர்கள்’ என்ற அரசியல் ரீதியான கேள்விக்கு, `இன்னும்கூட இரண்டு மூன்று மாதங்கள் அவர் இங்கே தங்கியிருக்கட்டும். ஏனெனில், அவர் வசிப்பதற்கான சரியான இடம் இதுதான். வாரணசியில் தனது கடைசி காலத்தை செலவழிக்கவே மக்கள் எப்போதும் விரும்புவர்’ எனக் குறிப்பிட்டிருந்தார். `மோடியின் கடைசிகாலகட்டம் இதுதான்’ என்கிற ரீதியில் அகிலேஷ் யாதவ்வின் கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சையான நிலையில், பிரதமர் மோடியும் மறைமுகமாக இதுகுறித்த தனது கருத்தை இப்போது தெரிவித்துள்ளார்.