இந்தியா

பிச்சை எடுக்க அனுமதி கேட்கும் போலீஸ்காரர்: மும்பையில் பரபரப்பு

பிச்சை எடுக்க அனுமதி கேட்கும் போலீஸ்காரர்: மும்பையில் பரபரப்பு

webteam

மும்பையில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காவலர் சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி கேட்டுள்ளார்.

மும்பை சேர்ந்த தயானேஷ்வர் போலீஸ்  கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர் அம்மாநில முதலமைச்சர் மற்றும் போலீஸ் கமிஷ்னருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் தனக்கு இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது மனைவிக்கு சிகிச்சை அளிக்கவும் குடும்பத்தை கவனிக்கவும் தனக்கு பணம் தேவைப்படுகிறது. வங்கியில் பெற்ற கடனுக்கு மாதத்தவனை செலுத்த வேண்டியுள்ளது. சம்பளம் வராததால் இவற்றை எல்லாம் என்னால் சமாளிக்க முடியவில்லை.இதனால் காவலர் சீருடையுடன் பிச்சை எடுக்க எனக்கு அனுமதி தாருங்கள் என எழுதியுள்ளார். 

இவரது மனைவிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தயானேஷ்வர் விடுப்பு எடுத்துள்ளார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் தகவல் தெரிவித்துள்ளார். தயானேஷ்வரின் கடிதம் குறித்து அவர் பணிபுரியும் காவல் நிலையத்தில் கேட்டபோது, தயானேஷ்வர் கடந்த மார்ச் 20 -22ஆம் தேதி விடுப்பு எடுப்பதாக தெரிவித்தார்.ஆனால் அவர் மார்ச் 28ஆம் தேதி தான் பணிக்கு வந்தார். இதற்கிடையில் அவர் பணியில் சேரும் வரை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை எனக் கூறினர்.

இதுதொடர்பாக துணை காவல் ஆணையர், வசந்த் ஜெயதேவ்விடம் பேசியபோது, இந்த விவகாரம் காவல் துறை சம்பந்தப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என மறுத்துவிட்டார்.