இந்தியா

காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது: பர்வேஸ் முஷாரஃப்

காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது: பர்வேஸ் முஷாரஃப்

jagadeesh

இந்திய ராணுவத்துக்கு எதிராகப் போரிட காஷ்மீரிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சியளிக்கப்பட்டதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ஃபர்ஹகத்துல்லா பாபர் என்ற மூத்த தலைவர், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், பர்வேஸ் முஷாரஃப் அளித்த பேட்டி ஒன்றை பதிவிட்டிருக்கிறார். தேதி குறிப்பிடப்படாத அந்தப் பேட்டியில் முஷாரஃப், "1979ல், ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற மத ரீதியிலான தீவிரவாதத்தை அறிமுகம் செய்தோம்" என கூறியிருக்கிறார். இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து முஜாஹிதீன்களை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, ஆயுதங்களைக் கொடுத்ததாக முஷாரஃப் தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் தங்களது கதாநாயகர்கள் என்று கூறியுள்ள, ஹக்கானி, ஒசாமா பின்லேடன் ஆகியோரும் தங்களது ஹீரோக்கள் தான் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய ராணுவத்துக்கு எதிராகப் போரிட பாகிஸ்தானில் பயிற்சிபெற வந்த காஷ்மீரிகளும் கதாநாயகர்கள் என்று முஷாரஃப் கூறியுள்ளார். பயிற்சிக்குப் பின்னர் அவர்கள், லஷ்கர் இ தொய்பா போன்ற அமைப்புகளுடன் இணைந்து இந்திய ராணுவத்திற்கு எதிராக போரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வந்த நிலையில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் இவ்வாறு பேட்டி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.