இந்தியா

”நீதிபதிகள் நியமனத்தில் எல்லாத்தையும் தேவையில்லாம பிரச்னையாக்குறாங்க” - கிரண் ரிஜிஜு

”நீதிபதிகள் நியமனத்தில் எல்லாத்தையும் தேவையில்லாம பிரச்னையாக்குறாங்க” - கிரண் ரிஜிஜு

webteam

“நீதிபதிகள் நியமனம் பற்றிய கொலிஜியம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளோம்” என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் புதுச்சேரி வழக்கறிஞர்கள் அலுவலக அறைகளுக்கான கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு பூமி பூஜை பணிகளைத் தொடங்கிவைத்தார். இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் வெங்கட்ரமணி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதி அரசர் (பொறுப்பு) ராஜா, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, “நீதிமன்றத்தில் அதிக நேரம் மக்கள் செலவிடக்கூடாது. நீதி விரைந்து தரப்படுதல் அவசியம். நீதிமன்றம் நவீனப்படுத்தப்படவேண்டும். அதற்கு நீதிமன்றங்களில் தரமான 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும். கடந்த 2014ஆம் ஆண்டு சான்றிதழ்களில் உயர் அதிகாரிகள் கையெழுத்து தேவையில்லை என்ற முறையை பிரதமர் நடைமுறைப்படுத்தினார். இது ஜனநாயகம். நீதித்துறை மக்களுக்கானது. நீதித்துறைக்கு அனைத்து வித ஒத்துழைப்பையும் அரசு தரும்.

உச்சநீதிமன்ற நீதிபதி தொடங்கி அனைத்து நீதிபதிகளுக்கும் தெரிவிப்பது தன்னிச்சையாக நீதித்துறை செயல்படும் என்ற உறுதியைத்தான். நீதிபதிகள் நியமனம் பற்றிய கொலிஜியம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளேன். உச்சநீதிமன்றம் உத்தரவைப் பின்பற்றியே தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். அதுதொடர்பாக பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில், தற்போது நிலையே தொடரும்.

நியமனத்தில் சில விசயங்களை மேம்படுத்த விரும்புகிறோம். பலரும் தேவையில்லாமல் எல்லா விஷயங்களையும் பிரச்சினையாக்குகின்றனர். நீதித்துறைக்கும், அரசுக்கும் பிரச்சினை என்று கூறுவது தவறானது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சுமுக உறவே உள்ளது. புதுச்சேரிக்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை அல்லது பென்ஞ் நிச்சயம் அமைத்து தரப்படும்” என உறுதியளித்தார் அமைச்சர் கிரண் ரிஜிஜு.

இதில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை, ”உள்ளூர் மொழியில் நீதிமன்றத்தில் வாதாட வேண்டும். தமிழில் வாதாடுவது சிறப்பாக இருக்கும். எனினும், பல சிக்கல்கள் இதில் இருந்தாலும் மக்களுக்கு இது மிக உதவியாக இருக்கும். நீதித்துறையில் பணியாற்ற அதிகளவில் பெண்கள் வரவேண்டும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய முதல்வர் ரங்கசாமி, ”புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரி வருகிறோம். அதற்கான ஆலோசனைகளை நீதித்துறையினர் அரசுக்கு வழங்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார்.

- ஜெ.பிரகாஷ்