'ஜெய் ஸ்ரீராம்' என்பது வங்காள கலாச்சரத்துடன் தொடர்புடையது அல்ல என்று நோபல் பரிசு பெற்றவரும் பொருளாதார அறிஞருமான அமர்தியா சென் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கருத்து மோதல்கள் வலுத்து வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செல்லும் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கூறி முழக்கம் விடுத்து வருகின்றனர். அத்துடன் அவருக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கடிதத்தையும் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் நோபல் பரிசு பெற்றவரும் பொருளாதார அறிஞருமான அமர்தியா சென் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதில், “ ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகத்திற்கும் வங்காள கலாச்சாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வங்காள கலாச்சாரத்திற்கும் ‘மா துர்கா’ என்ற வாசகத்திற்கே அதிக தொடர்பு உண்டு. என்னுடைய நான்கு வயது பேத்தியிடம் அவருக்குப் பிடித்த கடவுள் யார் என்று கேட்டேன்? அதற்கு என் பேத்தி மா துர்கா என்றார். எனவே ‘மா தூர்கா’ என்பது மேற்கு வங்க மக்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்துவருகிறது.
தற்போது கேட்கும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற வாசகம் மக்களை அடிப்பதற்கே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த வாசகத்தை இதற்கு முன்பு இவ்வளவு பெரிதாக நான் கேட்டதில்லை. அதேபோல தற்போது தான் மேற்கு வங்கத்தில் ராம் நவமி கொண்டாட்டங்கள் தீவிரமடைகிறது. எனினும் இவை எதுவும் துர்கா கடவுளின் முக்கியத்துவத்திற்கு அருகில் வரமுடியாது” எனத் தெரிவித்துள்ளார்.