“ஆபாச படங்களை செல்போனில் வைத்திருந்தால் நடவடிக்கை பாயும்”- சென்னை ஏடிஜிபி எச்சரிக்கை
குழந்தைகளின் ஆபாச படங்களை செல்போனில் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
சில இணையதளங்கள் தங்களது தளங்களில் உறுப்பினர்களை வாடிக்கையாளர்களாக வைத்துக் கொண்டு அவர்கள் பார்ப்பதற்கு ஆபாச படங்களை வழங்கி வருகின்றன. சில தளங்கள் கட்டணமில்லாமால் இலவசமாக ஆபாச படங்களை வழங்கி வருகின்றன. இந்தியாவில் ஆபாச தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் சில ஆபாச இணையதளங்கள் இன்னும் தொடர்வதாக புகார்கள் உள்ளன.
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்களில் இந்த ஆபாச படங்களே முக்கிய பங்கு வகிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க புலனாய்வு துறை வெளியிட்ட தகவலில், குழந்தைகளின் ஆபாசபடங்களை பார்க்கும் மக்களின் பட்டியலில் தமிழகம் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து சென்னை ஏடிஜிபி ரவி, குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மற்றும் இணையத்தில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் தெரிவித்தார். இது தொடர்பாக 12 நபர்கள் கைதும் செய்யப்பட்டனர். இது தமிழகம் முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் இனி செல்போனில் ஆபாச படங்களை வைத்திருந்தாலே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் “ இந்தியாவிலே தமிழகத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றம் குறைவாக உள்ளது.
குறிப்பாக சென்னை நகர் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் முதலிடத்தில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் முறை தமிழகம் முழுவதும் உள்ளது.பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் பட்டியல், ஒவ்வொரு காவல்நிலைத்திலும் ஆவணம் செய்யப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் ஆலோசனை மையங்கள் துவங்கப்பட உள்ளன.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து காவல்துறை ஈடுபட்டு வருகிறது.
குழந்தைகள் ஆபாச படத்தை செல்போனில் வைத்திருந்தால் குற்றம் என போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. செல்போனில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களை வைத்திருந்தவர்களில் இதுவரை 12 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கு அதிகபட்ச தண்டனை வழங்கவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆபாச படம் குற்றம் தொடர்பாக அனைத்து உயர் அதிகாரிகள் மற்றும் ஐ.ஜி.களுக்கு இந்த சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. புகார் அளிக்கும் பட்சத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.குற்றமில்லாத மாநிலமாக தமிழகம் உருவாக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என தெரிவித்தார்.