இந்தியா

“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!

“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!

rajakannan

இஸ்ரோவில் மிக உயர்ந்த பதவியில் இருந்த ஒருவரை ஏதோ ஒரு வழக்கில் திட்டமிட்டு சிக்க வைத்து அவரை வாழ்க்கையையே சில காலம் முடக்க முடியும் என்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் விஷயம். இதுதான், விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையில் நடந்துள்ளது. இன்று வெளியாகியுள்ள ராக்கெட்ரி திரைப்படத்தின் மூலம் அவரது வாழ்க்கை பலராலும் நினைவு கூறப்படுகிறது. யார் அந்த நம்பி நாராயணன்?, அவர் செய்தது என்ன?, அவர் வழக்கில் சிக்கியது எப்படி?, மீண்டது எப்படி? என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.

யார் இந்த நம்பி நாராயணன்?

1941ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த திருக்குறுங்குடியில் நம்பி நாராயணன் பிறந்தார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொறியியல் படித்த அவர், இஸ்ரோவில் 1966ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இஸ்ரோவில் அப்துல் கலாம் திடப்பொருட்களை எரிபொருளாக கொ‌ண்டு ராக்கெட் செலுத்துவது குறித்து ஆய்வு செய்த போது, நம்பி நாராயணன் திரவ எரிபொருட்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். வாயுக்களை திரவமாக்கி அவற்றை எரிபொருளாக பயன்படுத்தும் கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தில் நம்பி நாராயணன் பணியாற்றினார். திரவ எரிபொருள் தேவையை முன்கூட்டியே கணித்த நம்பி நாராயணன் முதல் திரவ உந்து மோட்டாரை 1970களின் தொடக்கத்தில் உருவாக்கினார்.

வழக்கின் பின்னணி:

வழக்கின் மிக முக்கியமான நபராக இருந்தவர் மாலத்தீவைச் சேர்ந்த மரியம் ரஷீதா என்ற பெண்தான். 1994-ம் ஆண்டு இவரை கேரளா போலீஸ் திருவனந்தபுரத்தில் கைது செய்தனர். அவரிடத்தில் இருந்து இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட் இன்ஜின்களின் வரைபடங்களை கேரள போலீசார் கைப்பற்றினர். இந்த வழக்கில் அந்த பெண்ணிடம் இருந்த பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாட்டு அதிகாரிகளுக்கு வழங்கிய புகாரில் நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கிட்டதட்ட 50 நாட்கள் வரை அவர் சிறையில் இருந்தார். சிறையில் இருந்த போது காவல்துறையினரின் கடுமையான அடக்குமுறைகளுக்கு ஆளானார்.

ஜாமீனின் வெளிவந்த நம்பி நாராயணன் பல்வேறு சட்டப்போராட்டம் நடத்தினார். அவர் மீதான குற்றச்சாட்டை 1996ஆம் ஆண்டு சிபிஐ முழுமையாக நீக்கியது. அதனைத் தொடர்ந்து 1998 ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் நம்பி நாராயணன் நிரபராதி எனத் தீர்ப்பளித்தது. சி.பி.ஐ அறிக்கையைத் தொடர்ந்து நம்பி நாராயணன் உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

மீண்டும் இஸ்ரோவில் பணி:

பின்னர் மீண்டும் இஸ்ரோவில் சேர்ந்து நம்பி நாராயணன் பணிகளை செய்து வந்தார். உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டதால் 1999ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையம் மூலமாக கேரள அரசிடம் இழப்பீடு கோரினார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் நம்பி நாராயணனுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. கேரள உயர்நீதிமன்றம் அந்த இழப்பீட்டு தொகையை 10 லட்சம் ரூபாயாக குறைத்து உத்தரவிட்டது. பின் அடுத்தடுத்த மேல்முறையீடுகளுக்கு பின்னர் கேரள அரசு ரூ.1.3 கோடி இழப்பீடாக செலுத்த சம்மதித்தது.

“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?”

நடிகர் ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள நம்பி நாராயணன் பயோ பிக் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் மிக முக்கியமான கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது. ‘நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?’ என்று நம்பி நாராயணன் கேட்டிருப்பார். நாராயணன் எழுப்பிய இந்த கேள்வி இன்றளவும் விடை கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் வெளிநாட்டின் சதி உள்ளது என்பதுதான் ஒரு தகவல்.

நம்பி நாராயணன் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார். ``இந்தியா கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேற்றம் காண்பதற்குத் தடை ஏற்படுத்த முனைப்புக் காட்டியது. இதனால், சி.ஐ.ஏ-வை ஏவிவிட்டது. அடுத்தவர்களை அழிப்பதில் வல்லமை படைத்த சி.ஐ.ஏ தனக்கு மசிந்த இந்திய போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகளை ஜோடித்து என்னைக் கைது செய்ய வைத்தது'' என்று 'Orbit of memories' என்கிற தனது சுயசரிதைப் புத்தகத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.

படத்திலும் க்ளைமேக்ஸில் இதுதொடர்பாக ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதாவது, நாசாவில் இருந்து வெளியேறிய பின்னர் நம்பி நாராயணன் செல்லும் இடமெல்லாம் அவரை நாசாவைச் சேர்ந்த நபர் பின்தொடர்வார். படத்தில் பேட்டி முடிந்த பின்னர் அது தொடர்பான காட்சிகள் இருக்கும். நம்பி நாராயணன் கைதுக்கு பின் மூளையாகச் செயல்பட்டவர் யார் என்பது குறித்து தெளிவான பதில் இதுவரை கிடைக்கவில்லை.