இந்தியா

“திரும்பி செல்லாதீர்கள் மோடி” -  ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்

“திரும்பி செல்லாதீர்கள் மோடி” -  ட்ரெண்ட் ஆன DontGoBackModi ஹேஷ்டேக்

rajakannan

இந்திய அளவில் #DontGoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்தியா வந்தார். மாமல்லபுரத்தில் மோடியுடனான தனிப்பட்ட சந்திப்புக்குப் பின்னர், காஞ்சிபுரத்தின் அடையாளமாக திகழும் பட்டுப்புடவை, கோவை கைத்தறி, கைவினைப்பொருட்களின் கண்காட்சி மோடி தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை இருநாட்டுத் தலைவர்களும் பார்வையிட்டனர். 

அப்போது ஜின்பிங்கிற்கு சிறப்பு செய்யும் வகையில் அவருடைய உருவம் நெய்யப்பட்ட கைத்தறி பட்டு சால்வை பரிசாக வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்த நெசவாளர்கள் கைவண்ணத்தில் இந்த சால்வை உருவாக்கப்பட்டது. 6 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்ட சிவப்பு நிற சால்வையில் தங்கநிறத்தில் சீன அதிபரின் உருவப்படம் மிகவும் தத்ரூபமாக நெய்யப்பட்டிருந்தது. இத்துடன் சிவப்பு நிறத்தால் ஆன காஞ்சிபுரம் பட்டுப்புடவையும் ஷி ஜின்பிங்கிற்கு மோடி பரிசாக வழங்கினார். இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு மதியம் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து நேபாளம் புறப்பட்டார் ஷி ஜின்பிங்.

அதேபோல், 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, #DontGoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. வழக்கமாக மோடி தமிழகம் வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டேக் தான் ட்ரெண்ட் ஆகும். #TNWelcomeModi ட்ரெண்ட் செய்யப்பட்டாலும், #GoBackModi-தான் முன்னிலையில் இருக்கும். ஆனால், இன்று #DontGoBackModi என்ற ஹேஷ்டேக் நீண்ட நேரம் ட்ரெண்டில் உள்ளது.

இந்த ஹேஷ்டேக்கில் பிரதமர் மோடியை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டு நாள் பயணம் தொடர்பாக புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். கடற்கரையில் மோடி தூய்மை பணியில் ஈடுபட்டதை பலரும் பாராட்டியுள்ளனர். அத்துடன், தமிழர்களின் பாரம்பரியமான வேஷ்டி சட்டையில் சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றதையும் பலரும் சிலாகித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.