இந்தியா

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம் - உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம் - உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜா. ஜாக்சன் சிங்

"ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம்" என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அங்குள்ள பல்வேறு கல்லூரிகளில் ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு கல்லூரிகள் அனுமதி மறுத்ததால், இந்தப் பிரச்னை பூதாகரமானது. ஹிஜாபுக்கு ஆதரவு தெரிவித்து ஒருதரப்பு மாணவர்களும், எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பு மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தை முன்வைத்து சில கல்லூரிகளில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.

பல இடங்களில் போலீஸாருக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதலும் வெடித்தது. நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த கர்நாடகா அரசு, பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

இதனிடையே, ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்கு செல்ல அனுமதி வழங்கக்கோரி, இஸ்லாமிய மாணவிகள் சார்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நேற்று விசாரித்த நீதிமன்றம், "இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு மத ரீதியிலான உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல வேண்டாம்" என உத்தரவிட்டது.

இந்நிலையில், கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மாணவி ஒருவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இதனை அவசர வழக்காக கருதி, உடனடியாக விசாரிக்குமாறும் கோரப்பட்டது. இந்த மனுவானது, தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, "ஹிஜாப் விவகாரத்தை தேசிய பிரச்னையாக மாற்ற வேண்டாம். இந்த விஷயத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை கவனித்து வருகிறோம். உடனடியாக இந்த பிரச்னையை டெல்லிக்கு கொண்டு வருவது நியாயமா? இதில் எப்போது தலையிட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அப்போது நாங்கள் வருகிறோம்" எனத் தெரிவித்தார்.