இந்தியா

"தேர்தலில் தோற்றதால், கத்துகின்றீர்களா?"-தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மம்தா ஆவேசம்

"தேர்தலில் தோற்றதால், கத்துகின்றீர்களா?"-தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக மம்தா ஆவேசம்

நிவேதா ஜெகராஜா

"என்னுடைய நடவடிக்கைகள், பிரதமரின் ஈகோவை தொட்டிருந்தால், அவரின் பாதம் தொடவும் தயக்கமில்லை" எனக் கூறியுள்ளார் பிரதமர் மம்தா பானர்ஜி.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்கு யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேற்றைய தினம் பார்வையிட்டிருந்தார். மற்றொருபக்கம், பிரதமர் மோடியும் அனைத்தையும் பார்வையிட்டார். மோடி, மேற்கு வங்கம் மட்டுமன்றி, ஒடிசாவிலும் பார்வையிட்டார். பிரதமர் மேற்கு வங்கத்துக்கு பயணப்பட்டபோது, அவரை வரவேற்க மம்தா வரவில்லை. மாறாக பாஜகவினரே சென்றிருந்தனர். மோடியின் அடுத்தடுத்த கூட்டங்களிலும் அவர் பங்கேற்காமலேயே இருந்தார். இடையில் 15 நிமிடங்கள் மட்டுமே பிரதமரை சந்தித்தார் மம்தா. மீண்டும் அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதைத்தொடர்ந்து, மம்தா உள்நோக்கத்துடன் பிரதமரை அவமதிக்கவே செய்தார் எனக்கூறி பாஜக அமைச்சர்கள், தலைவர்கள் விமர்சித்ததால், அங்கு அரசியல் சூடுபிடித்தது.

பிரதமர் வந்திருப்பது அறிந்தபின்னரும், தனது பணிகளை எப்போதும்போல அவர் செய்துவந்துள்ளார் என்பதை சுட்டிக்காட்டி, பாஜக தலைவர் நட்டா ட்விட்டரில் நேற்றைய தினம் பதிவொன்றை போட்டிருந்தார். அதில், "யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் உறுதுணையாக இருக்கும்போது, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒத்துழைப்பை தரவேண்டும். கட்சி பாகுபாடின்றி அனைத்து முதல்வர்களுடனும் இணைந்து செயல்படவே பிரதமர் விரும்புகிறார். ஆனால் மேற்கு வங்க முதல்வர் அதை ஏற்பதாக தெரியவில்லை. அவரின் இந்த அரசியல் செய்கைகள், வங்காள மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளன" எனக் கூறியுள்ளார்.

இவரைப்போல பாஜகவை சேர்ந்த பலரும் மம்தாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எதிர்ப்புகளை தொடர்ந்து, மம்தா இன்று இதுபற்றி பேசியிருக்கிறார். அதில், "என்னை இப்படி அவமதிக்காதீர்கள். தேர்தலில் நாங்கள் ஜெயித்ததற்காக, இப்படி நீங்கள் நடந்துக்கொள்கின்றீர்களா? உங்களின் அத்தனை உச்சபட்ச முயற்சிக்குப் பிறகும், நீங்கள் தோற்றுவிட்டீர்கள். அதற்காகத்தான் இப்படி தினந்தோறும் கத்திக்கொண்டிருக்கின்றீர்களா?" எனக்கூறியுள்ளார்.

மேலும், "நான் புயல் பாதித்த இடங்களை பார்வையிட செல்வதை முன்னரே திட்டமிட்டிருந்தேன். பிரதமர், திடீரென அவரது பயணத்தை திட்டமிட்டிருந்தார். அரசியல் பழிவாங்குதல் நிகழ்வாகவே, பிரதமர் இந்த பயணத்தை திட்டமிட்டிருந்திருக்கிறார். அதனாலேயே அவரை மேற்கு வங்கத்தின் எதிர்க்கட்சியை சேர்ந்த பாஜக-வினரை மட்டும் சந்தித்துள்ளார்.

என் பணிக்கிடையில், விமானம் வழியாக பயணித்து, 15 நிமிடங்கள் நான் பிரதமரை சந்தித்து, திட்டவரைவுரைகளை பகிர்ந்தேன். மட்டுமன்றி, என் பயணத்தை தொடங்கும் முன் அவரிடம் தெரிவித்து, அனுமதியும் பெற்றிருந்தேன். ஆக, இதில் எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது" என தன் தரப்பு விளக்கத்தை கூறியுள்ளார்.

'பிரதமரையும், ஆளுநரையும் மம்தா பானர்ஜி 30 நிமிடங்கள் காக்க வைத்தார்' என்றும் அவர் மீது பலர் குற்றம் சுமத்தியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், மம்தா "பிரதமர் - முதல்வருக்கான ஆலோசனை கூட்டத்துக்கு நாங்கள் சென்றபோது, அதற்கு முன்பே அங்கு பிரதமர் வந்துவிட்டதாக அவர்கள் கூறினர். சரி நாங்களும் உள்ளே செல்கிறோம் என்று சொன்னதற்கு, அடுத்த ஒரு மணி பணி நேரத்துக்கு யாரும் உள்ளே செல்லக்கூடாது என சொல்லிவிட்டனர்.

பின் சில நிமிடங்கள் கழித்து, மீட்டிங், வேறொரு அறையில் நடப்பதாக சொன்னார்கள். பின்னர் நாங்கள் அங்கு சென்றோம். அங்கு, பிரதமர், ஆளுநருடனும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடனும் மீட்டிங் நடத்திக் கொண்டிருந்தார். பிரதமர் - முதல்வர் ஆலோசனை கூட்டத்தில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஏன் வந்தனர் என்பது தெரியவில்லை. புயல் பாதிப்புகளின் விவரங்களை பிரதமரிடம் அளித்துவிட்டு, அடுத்த இடங்களுக்கு பார்வையிட திட்டமிட்டிருந்தோம். அந்த விவரங்களை சமர்ப்பிக்கவே, பிரதமரிடம் மூன்று முறை நான் அனுமதி கேட்டேன்" என்று விளக்கம் கூறியுள்ளார்.

அனைத்து விளக்கங்களுக்கும் பிறகும்கூட, தன் மீது குற்றம் என சொல்லப்படுவதால், "என்னுடைய நடவடிக்கைகள், பிரதமரின் ஈகோவை தொட்டிருந்தால், அவரின் பாதம் தொடவும் தயக்கமில்லை எனக்கு. என்னுடைய மக்களுக்கு நல்லது நடப்பதற்காக, நான் அதையும் செய்வேன்" பிரதமர், தலைமைச் செயலாளரின் பணியிட மாற்றத்தை திரும்பிப்பெற வேண்டும். மீறி செய்வது, நாடு முழுவதும் அதிகாரவர்க்கத்தினருக்கு இழைக்கப்படும் அநியாயம்" என தன் தரப்பு நியாயத்தை கூறியுள்ளார்.

தேர்தலுக்குப் பிறகும் இருதரப்பினரும் இப்படி மோதிக்கொள்வது, மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.