மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வழக்கத்திற்கு மாறகவும், விநோதமாகவும் நடந்துகொள்வதாக மத்திய இணையமைச்சர் பபுல் சுப்ரியோ விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வாகனத்தில் செல்லும்போது, சாலையில் குறுக்கிடும் பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்புவதை வாடிக்கையாக மாற்றி வருகின்றனர். அவ்வாறு கோஷமிடும் நபர்களை காரில் இருந்து இறங்கி மம்தா கண்டிக்கிறார். இது தொடர்கதையாக மாறி வருகிறது.
இதுதொடர்பாக அண்மையில் கருத்து தெரிவித்த மம்தா, “பாஜகவினர் ஜெய் ஸ்ரீ ராம் எனக் கோஷமிடுவதில் எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால் அவர்கள் அவ்வாறு கோஷமிட்டு மேற்கு வங்கத்திற்குள் பிரிவிணையை கொண்டு வர முயற்சிக்கின்றனர். அவர்கள் மதப் பிரச்னை எழுப்ப நினைக்கின்றனர்” எனக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் துறையின் இணையமைச்சர் பபுல், “மம்தா அனுபவமுள்ள அரசியல்வாதி. ஆனால் அண்மைக்காலமாக அவரது நடவடிக்கை வழக்கத்திற்கு மாறாகவும், விநோதமாகவும் இருக்கிறது. அவர் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக பெற்ற வெற்றியால் அவர் பயந்துபோய் இருக்கிறார். மம்தாவை விமர்சித்து பலர் மீம்ஸ் போடுகிறார்கள். இது யாருக்கும் நல்லதல்ல. மம்தா விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என நாங்கள் வாழ்த்து அட்டைகள் அனுப்பவுள்ளோம்” என்று விமர்சித்துள்ளார்.